அந்தக் கறுப்பாடு அக்மலா? மறுக்கிறார் அக்மல்...

பாகிஸ்தானின் முதற்தெரிவில்லாமல் போயிருக்கும் விக்கற் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான கம்ரன் அக்மல் தான் கிறிக்கற்றை எப்போதும் மாசற்று விளையாடியதாகவும், எப்போதும் அணிக்காகவே விளையாடியதாகவும் எனினும் தன் மீதான ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் குறித்து அதிர்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

'இந்த விடயத்தை நான் நிச்சயமாக தொடர்ந்து கொண்டு செல்லப்போகிறேன்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.



கடந்த அவுஸ்ரேலிய சுற்றுலாவின் போது ரெஸ்ற் போட்டியொன்றில் 3 பிடிகளையும், ஒரு முக்கியமான ரண் அவுட் சந்தர்ப்பத்தையும் தவறவிட்ட பின் கம்ரன் அக்மலின் செயற்பாடுகள் கடுமையான கண்காணிப்புக்குள் வந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.





சில ஊடகங்கள் பாகிஸ்தானின் அந்தச் சுற்றுலாவிற்கான முகாமையாளராக செயற்பட்ட அப்துல் ரஹிப் கூட விசாரணைக் குழுவிடம் கம்ரனின் செயற்பாடுகள் குறித்து அச்சம் தெரிவித்திருந்ததாகத் தெரிவித்தன.

இதுவரை பாகிஸ்தானுக்காக 3 வகைக் கிறிக்கற் போட்டிகளிலும் மொத்தமாக 191 முறை களமிறங்கியிருக்கும் கம்ரன் அக்மலையும் இன்னொரு வீரரான ரானா நவீட் உல் ஹசனையும் சுட்டிக்காட்டி இவர்கள் தான் ஆட்டநிர்ணச் சதியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.

எனினும் இந்தக் குற்றசாட்டுக்கள் தொடர்பாக கம்ரன் அக்மல் காட்டமாக மறுத்துள்ளார்.

'நான் ஒருபோதும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. குறிப்பிட்ட சிலர் எனது கிறிக்கற் வாழ்க்கையை அழிக்க முற்படுகிறார்கள் போலத் தெரிகிறது.' என்று தெரிவித்தார் அக்மல்.

அக்மலின் நெருங்கிய நண்பரும், அவரது முகவருமான அஸார் மஜீத் உம் இது பற்றி தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார்.

'நான் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.ஆனால் பாகிஸ்தானிலுள்ள சில தனி நபர்கள் கம்ரன் அக்மலின் பெயரை நாசப்படுத்த முயல்கிறார்கள். பாகிஸ்தானுக்காக கம்ரன் விளையாடுவதை அவர்கள் விரும்பவில்லை.' என்றும் தெரிவித்தார்.

0 comments: