மொகமட் யூசுப் ஓய்வு....

பாகிஸ்தானின் சாதனைத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித்தலைவரும் பாகிஸ்தான் கிறிக்கற் சபையால் காலவரையரையற்ற தடை விதிக்கப்பட்டவருமான மொகமட் யூசுப் சர்வதேச கிறிக்கற் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளார்.



35 வயதான யூசுப் ஒரு கலண்டர் வருடத்தில் அதிக ரெஸ்ற் ஓட்டங்களான 1788 ஓட்டங்களை 2006ம் ஆண்டு பெற்று உலக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் 2 வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் கிறிக்கற் சபையால் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

'ஆம். பாகிஸ்தான் கிறிக்கற் வீரர் என்ற நிலையிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளேன். எனது முடிவு உணர்வு மேலீட்டால் எடுக்கப்பட்ட ஒன்றல்ல' என்று AFP செய்தி நிறுவனத்திற்கு யூசுப் தெரிவித்துள்ளார்.

'இத்துணை ஏற்றுக் கொள்ள முடியாத அவமானத்திற்குப் பின்னர் தொடர்ந்து பாகிஸ்தானுக்காக கிறிக்கற் விளையாடுவதில் அர்த்தமேதும் இல்லை. எனது முடிவை வரும் திங்கட்கிழமை அறிவிப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தடையை எதிர்த்து முறையிடப் போவதாக யூசுப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
'ஆம். நான் இப்போதும் மேன்முறையீடு செய்யலாம். ஆனால் இறுதி முடிவு திங்கட்கிழமை எடுக்கப்படும்.' என்றார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் யூசுப்பின் பெயர் இடம்பெறாமையால் மேலும் வருத்தமடைந்திருந்த யூசுப் 'நான் நிறையவே காயப்பட்டு உணர்கிறேன். நான் எப்போதும் பாகிஸ்தானுக்காகவே விளையாடினேன், எனது இரசிகர்கள் இதை அறிவார்கள். ஆனால் பாகிஸ்தானில் கிறிக்கற்றை நடத்துபவர்களுக்கு இது தெரியாது, இது சோகமானது' என்றார்.

'எனது 12 வருட கிறிக்கற் வாழ்க்கை களங்கமற்றது. நான் யாரையும் ஏமாற்றியிருக்கவில்லை' என்றார்.

றோமன் கத்தோலிக்கராக பிறந்த யூசுப் 2005ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டதோடு அதன்பின் கிறிக்கற் தவிர மத போதனைகளிலும் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதவரை யூசுப் 88 ரெஸ்ற் போட்டிகளில் 24 சதங்கள் உட்பட 7431 ஓட்டங்களையும் 282 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 9624 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இவர் 2007ம் ஆண்டுக்கான சிறந்த கிறிக்கற் வீரராக சர்வதேச கிறிக்கற் சபையால் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments: