பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டய நிர்ணய சதியில். - ஐ.சி.சி...

பாகிஸ்தான் அணியின் வீரர்கள் ஆட்டய நிர்ணய சதியில் ஈடுபட்டமைக்கான ஆதாரத்தை சர்வதேச கிறிக்கற் சபையானது பாகிஸ்தான் கிறிக்கற் சபையிடம் சமர்ப்பித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பின் பின் பாகிஸ்தானின் பிரதம தெரிவாளர் இஜாஸ் பட் தற்போதைய அணியிலுள்ள இரு வீரர்களை சுட்டிக் காட்டிய மாதிரி சொல்லியதாகவும், இவை பழைய சம்பவங்களெனவும், ஈடுபட்டது பழைய வீரர்கள் எனவும் தெரிவித்துள்ளாரென கிறிக்கின்போ செய்தி வெளியிட்டுள்ளது.

இஜாஸ் பட்


தொடர்ந்து மேலதிக தகவல்கள் வரும் எனவும் கிறிக்கின்போ தெரிவிக்கிறது....

செய்தியைத் தொடர,
http://www.cricinfo.com/pakistan/content/story/450125.html
என்ற சுட்டிக்கு செல்லுங்கள்...

குறிப்பு: கிறிக்கின்போ தங்களது செய்தியை தற்போது மாற்றியிருக்கிறது.
அதன்படி அது இந்நாள் வீரர்கள் எவரும் இல்லையெனவும், பழைய பிரச்சினையே என்றும் குறிப்பிடுகின்றது.
முழுமையான செய்திகளுக்கு மேல உள்ள சுட்டியை அழுத்துக...

இதே வேளை பாகிஸ்தானின் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண முன்னோடிவட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தரும், ஐ.பி.எல் 1 இல் கலக்கிய சொகைல் தன்வீரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யுனிஸ் இற்கு பயிற்சியாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பயிற்சியாளரான  இஜாஸ் அகமட் தொடர்ந்து அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக அணியில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பியன்ஸ் லீக்கிலும் பாகிஸ்தான் இல்லை

பாகிஸ்தான் சம்பியன்ஸ் லீக்கில் இம்முறை பங்குபற்றாது என்று பாகிஸ்தான் கிறிக்கட் சபைத்தலைவர் இஜாஸ் பட் தெரிவித்தார். தான் இது பற்றி ஏற்கனவே லலித் மோடியுடன் பேசியதாகவும், பாகிஸ்தானிலிருந்து ஒரு அணியும் கலந்து கொள்வதற்கான சாத்தியம் இல்லை என்றும் இஜாஸ் பட் தெரிவித்தார்.

எங்கள் வீரர்கள் IPLக்குத் தெரிவு செய்யப்படவில்லை எனவே எங்கள் நாட்டு வீரர்களோ, அணிகளோ சம்பியன் லீக்கில் பங்குபற்றப்போவதில்லை என்று தெரிவித்தார்.

சம்பியன்ஸ் லீக்கில் நாடுமுழுவதும் இருந்து சிறந்த முதல்தர அணிகள் தெரிவுசெய்யப்படும். முதலாவது சம்பியன்ஸ் லீக் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்றது. ஆனால் பங்குபற்றும் நாடுகளில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருந்தது, ஆனால் மும்பாய் தீவிரவாத தாக்குதலால் அவர்கள் பாகிஸ்தானை தவிர்த்திருந்தனர். 2010ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் லீக் நடைபெறும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த அவமானமான வெளியேற்றதுக்குப்பிறகு லலித் மோடி பாகிஸ்தான் எதிர்கால போட்டிகளில் விளையாடும் என்தெரிவித்தாலும், இஜாஸ் பட் அது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை, எதிர்காலத்தில் IPL மற்றும் சம்பியன்ஸ் லீக்கில் விளையாடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை ஆனால் இந்த வருடம் தாங்கள் இவை ஒன்றிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பட் தெரிவித்தார்.

சச்சின் சாதனை - தொடரை வென்றது இந்தியா

இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தொடர், டெஸ்டிலும் முதலிடத்துக்கா போட்டி இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் இன்றைய போட்டி இன்னும் முக்கியத்துவம்வாய்ந்த ஒரு உலகசாதனை நிகழ்த்தப்பட்ட போட்டி.

அதுவும் உலகின் துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் 200 ஓட்டங்கள் பெற்று அதிக ஓட்டம் பெற்ற முதல் வீரராகவும் கிறிக்கற் வரலாற்றில் 200 ஓட்டங்களைப்ப பெற்ற முதல் வீரராகவும் திகழ்கிறார். இதுவரை ஒருநாள் போட்டியில் ஒரு வீரர் பெற்ற அதிக ஓட்டமாக இருந்த சிம்பாபே வீரர் சி.கே.கொவென்ரி மற்றும் பாகிஸ்தானின் சயீட் அன்வர் ஆகியோரின் 194  ஓட்டங்கள், இன்று சச்சினால் தகர்க்கப்பட்டது.

இதில் மற்றுமொரு சாதனையாக ஒரு ஒருநாள்இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் பெற்ற வீரராக சச்சின் விளங்குகிறார்.

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்தவகையில் ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடிகளாகக் களமிறங்கிய சேவாக் சச்சின் ஆரம்பம் முதலே ஓட்டக்குவிப்பில் வேகம்காட்டினர். ஆனால் 3.5 ஆவது ஓவரில் 9 ஓட்டங்களுடன் சேவாக் ஆட்டமிழக்க, அடுத்துக்களமிறங்கிய தினேஸ் கார்த்திக் சச்சினுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். 29 ஓவர்கள் நிலைத்து நின்ற இந்த ஜோடி 194 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டது. 79 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் கார்த்திக் ஆட்டமிழக்க அடுத்து வந்த யுசுப் பதான் 36 ஓட்டங்களைப் பெற்று 41வது ஓவரில் ஆட்டமிழந்தார். அந்தவேளையில் இந்தியா 300 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் டோனி தனது விஷ்வரூபத்தை அனைவருக்கும் காட்டியிருந்தார், 37 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.(7நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓடடங்கள் அடங்கலாக).

இறுதிவரை ஆட்டமிழக்காத சச்சினின் 200 (25நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓடடங்கள் அடங்கலாக)ஓட்டங்களுடன் இந்தியா 401 ஓட்டங்களை பெற்றது.

சச்சினி பிட்ச் மப்


 பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, அம்லா கிப்ஸ் ஜோடியுடன் தனது இன்னிங்சை ஆரம்பித்தது. 3வது ஓவரிலேயே பிரவீன் குமார் கிப்சை ஓய்வறைக்கு அனுப்பினார். அடுத்து துடுப்பெடுத்தாட வந்த வன் டி மெர்வ் அடித்தாட முற்பட்டு சீகிகரமே ஓய்வறை திரும்பினார். ஆனால் போட்டியை வெற்றிக்கு இட்டுச்செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹசிம் அம்லா ஆரம்பத்தில் சற்று நம்பிக்கையளித்தாலும் சிறீசாந்தின் பந்து வீச்சில்34 ஓட்டங்களைப் பெற்றவேளையில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு இணைந்த டிவில்லியர்ஸ், கலிஸ் ஜோடியும் நின்று பிடிக்கவில்லை, கலிசும் ஆட்டமிழக்க தனிமனிதனாக போராட்டத்தில் ஈடுட்ட டிவில்லியர்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காது 101 பந்துகளுக்கு 114 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்காவின் அதிகபட்ச இணைப்பாட்டமாக டி வில்லியர்ஸ், பானேல் ஜோடி பகிர்ந்து கொண்ட 77 ஓட்டங்கள் பதிவாகியது.

ஜே.பி டும்மினி,ஸ்ரெயின் ஆகியோர் ஓட்டமெதையும் பெறாமலும்,பீட்டர்சன்-9, பவுச்சர்-14, பார்னல்-18, லங்கர்வெல்ட்-12 ஆகிய சொற்ப ஓட்டங்ளையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் தென்னாபிரிக்கா 42.5 ஓவர்களில் சகல விக்கற்றுகளையும் இழந்து 248 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக உலகசாதனைத் துடுப்பாட்டவிரர் சச்சின் தெரிவானார். அத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற ரீதியில் வெற்றியீட்டியது.

இப்போட்டி முடிவில் சச்சினுக்கு சில்வர் துடுப்பு, மற்றும் அந்த மைதானத்தில் பார்வையாளர் அரங்குக்கு சச்சினின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. தனது சாதனை பற்றி சச்சின் கூறுகையில் இந்தச்சாதனையை தான் தனது இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

சச்சின் 200 ஓட்டங்களைப் பெறும் போது அவுஸ்ரேலியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் சச்சினுக்கு வாழ்த்துக்களைத் ருவிற்றர் மூலமாக தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழில் கிறிக்கற் வலைத்தளம் சார்பில் சச்சின் டெண்டுல்கருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அடுத்த பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யுனிஸ்?

முன்னாள் பாகிஸ்தான் கிறிக்கற்வீரர் வக்கார் யூனிஸ் தான் பாகிஸ்தானின் பயிற்றுனர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாகவும் முழுநேர பாகிஸ்தான் பயிற்றுனராக தயார் எனவும் தெரிவித்தார்.சிட்னியில் குடியிருக்கும் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் கிறிக்கற் சபைத்தலைவர் இஜாஸ் பட்டுனனான கூட்டத்துக்குப் பிறகு முழுநேர பயிற்றுனராக இருப்பதற்கு ஒத்துக்கொண்டார்.

நான் நீண்டகாலத்துக்கு பாகிஸ்தான் பயிற்றுனராக இருக்க ஒத்துக்கொண்டதாகவும் எனவே 2011 உலகக்கிண்ணம் வரை தான் பயிற்றுனராக இருக்கலாம் என்று கருதுவதாகவும் தெரிவித்தார்.



இதேவேளை பாகிஸ்தான் கிறிக்கற் சபை பிரதான நிறைவேற்று அதிகாரி வசிம் பாரி கருத்துத் தெரிவிக்கையில் தாங்கள் வக்கார் யூனிசுடன் மேலும் பலருடன் பயிற்றுனர் பதவி பற்றி கலந்துரையாடுவதாகவும் , தற்போது நிச்சயமாக யார் பயிற்றுனர் என்று கூறமுடியாது என்றும் ஆனால் இன்னும் ஒரு வாரத்தில் பயிற்றுனர் யாரென்று தெரிவு செய்து அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.

யூனிஸ்கான் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்புப் பயிற்சியாளராக மட்டுமே அவுஸ்திரேலிய வெள்ளையடிப்புத் தொடரில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவுஸ்திரேலியாவுடனான தொடர் தோல்விகளுக்கு பயிற்றுனர் மட்டுமன்றி அணிக்குள் நிலவும் கசப்புணர்வுகள், அணி ஒற்றுமை இன்மை என்ற பல செய்திகளை யூசுப், இன்டிக்காப் அலாம் ஆகியோர் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெஸ்ற் போட்டிகளிலிருந்து லீ ஓய்வு பெற்றார்...

33 வயதானஅவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தனது ரெஸ்ற் கிறிக்கற்றிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

2008ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதிய ரெஸ்ற் போட்டிக்குப் பிறகு இதுவரை ரெஸ்ற் போட்டிகள் எதையும் விளையாடியிருக்காத பிரட் லீ தனது ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது விளையாடும் காலத்தை, சாத்தியத்தை அதிகரிக்கும் முகமாக தான் ரெஸ்ற் கிறிக்கற் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சிட்னி கிறிக்கற் மைதானத்தில் இடம்பெற்ற பத்திரிகை மாநாட்டில் றிக்கி பொன்ரிங் மற்றும் கிறிக்கற் அவுஸ்ரேலியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சகிதம் கலந்து கொண்டர் லீ...


'என்னைப் பொறுத்தவரை ரெஸ்ற் போட்டிகள் தான் எனக்கு விருப்பமானவை. அந்த பச்சைத் தொப்பியை அணிவதை நான் விரும்புகிறேன். ஆனால் நான் இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து கிறிக்கற் விளையாட விரும்பினால் சிலவற்றை விடவேண்டியுள்ளது.' என்றார் லீ.

சில அறிக்கைகள் பிரட் லீ இங்கிலாந்தின் அன்ட்ரூ பிளின்ரொவ் உடன் கலந்துரையாடிதன் பின்னர் ரெஸ்ற் கிறிக்கற் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை எடுத்தார் என்று தெரிவித்தன.
அதை ஆமோதிப்பது போல இது நிறைய மாதங்களாக எடுக்கப்பட்ட முடிவு என்று தெரிவித்தார்.

'இது ஒருநாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல. இது நிறையக் காலமாக யோசிக்கப்பட்டு வந்தது. கிறிக்கற்றை விட்டு விலகி இருந்ததால் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை என்னால் முடிவுசெய்யக் கூடியதாக இருந்தது' என்றும் தெரிவித்தார். இது 3 தொடக்கம் 4 மாதங்கள் தொடர்ந்து யோசித்து எடுக்கப்பட்ட முடிவு, இறுதியில் முடிவாக எடுத்திருக்கிறேன்.' என்றார் லீ.

2006ம் ஆண்டு விஸ்டன் கிறிக்கற் வீரராக அறிவிக்கப்பட்ட லீ, சொயிப் அக்தருக்குப் பின் வேகமான பந்தை (மணிக்கு 160.8 கிலோ மீற்றர்) வீசிய சாதனைக்குச் சொந்தக் காரராக இருக்கிறார்.

1999 ம் ஆண்டு தனது ரெஸ்ற் அறிமுகத்தை டேற்கொண்ட லீ இதுவரை 76 ரெஸ்ற் போட்டிகளை விளையாடியிருக்கிறார்.

பத்திரிகை மாநாட்டுப் படங்கள்...











:AFP செய்தி.

பிரட்லீ டெஸ்டிலிருந்து ஓய்வு



பிரட்லீ இன்று டெஸ்ட் கிறிக்கட்டிலிருந்து தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 33 வயதான அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ கடந்தவாரம் தான் டெஸ்ட் கிறிக்கற் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

இது பற்றி பிரட்லீ கூறும்போது "76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 310 விக்கட்டுகள் வீழ்த்தியிருக்கிறேன், ஆனால் காயங்களாலும், உபாதைகளாலும் அவை பறிக்கப்படும் போது வேதனையாக உள்ளது" என்றார். பிரட்லீ காயம் காரணமாக ஆஷஸ் போட்டியில் விளையாட முடியாமல் போனதும் அதிலிருந்து அதற்குப்பிறகு நடந்த பொக்சிங் தின கிறிக்கற் போட்டிவரை பிரட்லீ எந்த ஒரு டெஸ்டிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கருத்துத்தெரிவித்த பிரட்லீ எனது கிறிக்கற் வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம் நான் சிலவேளை ஒருநாள் போட்டிகளில் விளையாடலாம், அல்லது விளையாடாமலே போகலாம், எனது கிறிக்கற் வாழ்க்கை எனக்கு திருப்தியளிக்கிறது, ஆனால் இது எனது கிறிக்கற் வாழ்க்கை முடிந்து விட்டது என்றும் கூறமுடியாது.
நான் கிறிக்கற்றில் இன்னும் என்ன செய்ய வேண்டும் உண்மையாகவே எனக்குத்தெரியாது, எனக்குத் தெரிந்தவற்றை நான் களத்தில் செய்யத்தயாராக இருக்கிறேன். என்றார்.

அன்ரு பிளின்டோஃப், ஜேக்கப் ஓரம் ஆகியோரின் வரிசையில் இப்போது பிரட்லீயும் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பிரட்லீயும் இவர்களைப் போல ஒருநாள் மற்றும் ருவென்ரி ருவென்ரி போட்டிகளில் விளையாடுவார்என எதிர்பார்க்கலாம்.

IPL இற்கு ஆப்பு வருகிறதா?

IPLலில் நியூசிலாந்தின் பங்களிப்புப்பற்றி சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க, மற்றும் இங்கிலாந்து அணிகளின் கிறிக்கற் வீரர்கள் சங்கம் IPLஇல் பங்குபற்றுவதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.






வீரர்கள் தங்கள் சொந்த முடிவைஎடுக்கலாம் என்றும், ஆனால் கிறிக்கற் வீரர்கள் சங்கம் IPLஐ தவிர்க்கும்படி அவர்களது ஆலோசனையை தெளிவாக முன்வைக்கவிருப்பதாகவும் பாதுகாப்பு ஆலோசகர் டிக்கர்சன் அவர்கள் தீவிரவாதத் தாக்குதல் பற்றிய செய்தி உண்மை எனத்தெரிவித்துள்ளதும் இவர்களை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.

நியூசிலாந்து கிறிக்கற் வீரர்கள் சங்கத்தின் முகாமையாளர் ஹீட் மில்ஸ் தனது வீரர்கள் பங்குபற்றுவது இன்னும் முடிவெடுக்கப்படவில்லையென்றும், ஆனால் IPLலுடன் சம்பந்தப்பட்ட 6 வீரர்களுடன் கதைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

US$750,000 (சேன் பொண்ட் )டொலரிலிருந்து US$400,000 டொலர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் தங்கள் இந்தியா செல்ல நிராகரித்தால் வருமானத்தை இழக்கவேண்டி ஏற்படும்.


ஸ்டீபன் பிளமிங் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்றுவிப்பாளர் பணியில் இருக்கிறார், ஸ்டைரிஸ் டெக்கன் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போதும் 23 பேர் கொண்ட அணியில் தெரிவு செய்யப்படவில்லை. ஜெசி ரைடர், கைல் மில்ஸ் ஆகியோர் இம்முறை அணியில் இடம்பெறவில்லை.


நியூசிலாந்து கிறிக்கற் சபை, IPL தலைவர் லலித் மோடியிடமிருந்தும் BCCIயிடமிருந்தும் வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புமாறு அழுத்தங்களை பெறுவதாகவும், ஆனால் IPL ஒரு சர்வதேச அணிகளுக்கிடையிலா போட்டியல்ல, இதில் வீரர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு, தங்கள் முடிவை அவர்கள் எடுக்கலாம் என்று நியூசிலாந்து கிறிக்கறின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிக்கர்சன் தெரிவித்தார்.


மேலும் கருத்துவெளியிட்ட அவர் இது பெரும் அதிருப்தியை அளிப்பதாகவும், இம்முறை IPl இந்தியாவில் நடைபெறாவிட்டால் அது உலக கிறிக்கற்றுக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார்.


நியூசிலாந்து ஹொக்கி அணிக்கு உலகக்கிண்ண ஹொக்கி போட்டிக்குச் செல்ல அனுமதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹொக்கி போட்டிக்கான அணிகள் ஒரே விடுதியில் தங்கியிருப்பதும், ஒரே இடத்தில் மட்டுமே போட்டிகள் நடைபெறுகிறது. ஆனால் IPL போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள 12 இடங்களில்நடைபெறப்போவது குறிப்பிடத்தக்கது.


கடைசி IPL போட்டி கூட கடைசிநேர அறிவித்தலின்படி தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டது, கவனத்தில்கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

உலகக் கிண்ணத்தை நடாத்த மாற்று நாடுகளும் தயார் நிலையில்...

2011 உலகக் கிண்ணத்தை இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து பாதுகாப்புக் காரணங்களிற்காக மாற்றும் நிலையில் போட்டிகளை அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடாத்த திட்டங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நியூசிலாந்து கிறிக்கற் சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஜஸ்ரின் வோண் மேற்படி ஒரு திட்டமிருப்பதை ஏற்றுக் கொண்டபோதிலும், உலகக் கிண்ணம் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டதன்படி உபகண்டத்தில் நடைபெற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்ததோடு ஏற்கனவே திட்டமிட்டபடி நியூசிலாந்து இவ்வருட இறுதியில் இந்தியாவிற்கு பயணம் செய்யும் என்றும் தெரிவித்தார்.



'உலகக் கிண்ணம் நடைபெறும் காலத்தை மார்ச்-ஏப்ரல் என்பதிலிருந்து மாற்ற முடியாது. ஆகவே அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகியனவற்றாலயே போட்டிகள் இடம்மாற்றப்பட்டால் போட்டிகளை நடாத்த இயலும்' என்று நியூசிலாந்து இணையத்தளமொன்றிற்கு தெரிவித்தார் வோண்.

'வீரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பது வெளிப்படையான ஒரு தேவை. ஆனால் அதற்காக அச்சுறுத்தல் ஒன்று வரும்போது நாங்கள் விட்டுவிலகி ஓடக்கூடாது, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து அணிகளைச் சுற்றி அதிகரித்து அச்சுறுத்தலை இல்லாமல் செய்ய வேண்டும்.
இதற்கு நாங்கள் ஓர் தீர்வைக் காண வேண்டும். ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் கிறிக்கற்றின் இதயத்துடிப்பாக ஆசியாவே திகழ்கிறது' என்றும் தெரிவித்தார்.

அத்தோடு இந்தியாவில் பாதுகாப்பு விடயங்களை ஆராய்தல் முக்கியமானது என்றும் தெரிவித்த வோண், 'இந்தியா மிக முக்கியமானது. இந்தியாவிற்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் காரணமாக பயணம் செய்ய முடியாது என்ற ஓர் காட்சியை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. அது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. நடத்துபவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியமானவை. பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இருந்தால் உலகில் எந்த நாட்டிற்கும் செல்ல நான் தயார், அது ஈராக் ஆக இருந்தாலும்.' என்றும் தெரிவித்தார்.

எனினும் சர்வதேச கிறிக்கற் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகாட் பிரதான கிறிக்கற் விளையாடும் நாடுகள் ஒற்றுமையாகச் செயற்பட்டு உலகக் கிண்ணம் தீவிரவாதத்திற்கு அடிபணியாது தடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.



பாகிஸ்தானிலுள்ள அல்-குவைதாவின் ஒரு பிரிவு ஐ.பி.எல் போட்டிகளுக்கு வீரர்களை அனுப்பக்கூடாது என சர்வதேச கிறிக்கற் விளையாடும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த பின் பாதுகாப்புப் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரை வென்றது அவுஸ்ரேலியா...

அவுஸ்ரேலிய மேற்கிந்தியத் தீவுகளிடையே நடைபெற்ற 5 ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 4-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.
ஒருபோட்டி மோசமான காலநிலை காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





5ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ரேலியா ஷேன் வொற்சனின் அதிரடி 51, ஹடினின் 31, பொன்ரிங்கின் அதிரடி 61, கிளார்க் இன் 47, வைற் இன் 22 மற்றும் இறுதி நேரத்தில் அதிரடியாட்டம் புரிந்த அடம் வொஜெஸ் இன் 45 மற்றும் ஜேம்ஸ் ஹோப் இன் 26 பந்துகளில் பெறப்பட்ட 57 ஓட்டங்களால் 324 ஓட்டங்களைக் குவித்தது.







மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ராம்போல் 2 விக்கற்றுக்களையும், பொலார்ட் 2 விக்கற்றுக்களையும், சமி ஒரு விக்கற்றையும் கைப்பற்றினார்.



தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி வழமையைப் போல விக்கற்றுக்களை ஆரம்பித்திலேயே இழக்க ஆரம்பித்து 199 ஓட்டங்களுடன் சுருண்டது.
வழமையைப் போல கிறிஸ் கெயில் டக் பொலிங்கரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் கெயில் துடுப்பெடுத்தாடிய 4 முறையும் டக் பொலிங்கரின் பந்துவீச்சிலேயே கெயில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இதுவரை டக் பொலிங்கர் விளையாடி கெயில் துடுப்பெடுத்தாடிய 6 போட்டிகளில் 6 முறையும் டக் பொலிங்கரின் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக அதிகபட்சமாக டரன் சமி 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் கெரன் பொலார்ட் 51 பந்துகளில் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
 அவுஸ்ரெலியா சார்பாக பொலிங்கர் 3 விக்கற்றுக்களையும், போல் ஹரிஸ் மற்றும் புதியவர் ஸ்மித் ஆகியோர் 2 விக்கற்றுக்களையும், மக்கே மற்றும் ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கற்றையும் கைப்பற்றினர்.



போட்டியின் ஆட்டக்காரராக ஜேம்ஸ் ஹோப்ஸ் உம், தொடரின் சிறப்பாட்டக்காரராக தொடர்முழுவதும் பிரகாசித்த அவுஸ்ரேலிய அணித்தலைவர் றிக்கி பொன்ரிங் உம் தெரிவாகினர்.

இந்தத் தொடருக்கு முன்னர் தாங்கள் அவுஸ்ரேலியாவை 4-1 என்ற ரீதியில் தோற்கடிப்போம் என கிறிஸ் கெயில் சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் தொடரின் நடுவே அவுஸ்ரேலியா தங்களை விட சிறப்பாக விளையாடுகின்றனர் என்று ஒப்புக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதற்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஹோபார்ட் இல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

கடந்த 14ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இந்தியா தென்னாபிரிக்காவுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான முதலிடத்தை தெரிவு செய்யும் டெஸ்ட் போட்டி 5வது நாளான இன்று முடிவுக்குக்கு வந்தது. கடைசிவரை தோல்வியைத்தவிர்க்கப் போராடிய தென்னாபிரிக்காவால் கடைசியில் அது முடியாமல் போனது. முதல் போட்டியில் இன்னிங்சால் இந்தியாவை வென்ற தென்னாபிரிக்காவைப் பழி தீர்க்கும் வகையில் இந்தியா இன்னிங்சாலும் 57 ஓட்டங்களாலும் வெற்றியீட்டியது.

முதலில் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, கிரேம் சிமித்தின் விக்கெட்டை முதலிலேயே பறிகொடுத்தாலும் அம்லா, பீட்டர்சன் ஆகியோரின் சதங்களின் துணையுடன் 218 ஓட்டங்களை எட்டி வலுவான நிலையை அடைந்த வேளையில் பீட்டர்சனின் விக்கெட் இழப்பும் அடுத்து 229 ஓட்டங்களைப் பெற்றபோது அம்லாவின் ஆட்டமிழப்பும் தென்னாபிரிக்காவின் சரிவுக்கு வழிவகுத்தது. அடுத்த வந்த ஜக் கலிஸ்(10), ஏ.பி.டி.வில்லியர்ஸ்(12) , பார்னல்(12), மோர்க்கல்(11) ஆகியோரைத்தவிர அனைவரும் ஒற்றை ஓட்டங்களுடனேயே ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி 296 ஓட்டங்களுக்குள் சுருண்டது.இங்கு சகீர்கான் 4 விக்கெட்களையும், ஹர்பஜன் 3 விக்கெட்களையும் இசாந் சர்மா, மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்தியஅணி சோவாக்(165), சச்சின்(106), V.V.S.லக்ஸ்மன்(143), டோனி(132) ஆகியோரின் அபார சதங்களுடன் 643 ஓட்டங்களுக்கு 6விக்கெட்களை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. மோர்க்கல் 2விக்கெட்டையும், ஸ்டெயின், ஹரிஸ், ஜே.பி.டும்னி ஆகியோர் தலா 1 விக்கெட்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் துடுப்பெடுத்தாடத் தொடங்கிய தென்னாபிரிக்கஅணியின் ஆரம்ப ஜோடிகள் சீக்கிரமாகவே ஓய்வறைக்குத் திரும்பிவிட ஹசிம் அம்லா தனி மனிதனாக ஆடுகளத்தில் நின்று போராடினார், துடுப்பாட்ட வீரர்கள் யாருமே இவருக்குத் துணைபுரியாமல் போக கடைசிவரை போராடிய இவரைப்பாராட்டாமல் இருக்கமுடியாது. கடைசிவரை ஆட்டமிழக்காத அம்லா இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்தார்(123). இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாகப் பந்து வீசிய ஹர்பஜன் சிங் 5 விக்கெட்டுகளையும், மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், இசாந் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த ஹசிம் அம்லா தெரிவு செய்யப்பட்டார். முதலாவது போட்டியிலும் அம்லா சிறப்பாட்டக்காரர் விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதுதவிர அம்லா சச்சினின் பந்துவீச்சில் அம்லா அடித்த பந்து பவுண்டரி எல்லைக்கருகில் நின்றுவிட அதை பவுண்டரி எல்லைக்குள் தட்டிவிட்டார் சேவாக் இதை அவதானித்த நடுவர்கள் இந்தியாவுக்கு தண்டனையாக 5 ஓட்டங்களைதென்னாபிரிக்காவுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் கிரேம் ஸ்மித் இல்லை

கிரேம் ஸ்மித் இந்தியாவுடனான ஒருநாள் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைவிரலில் ஏற்பட்ட காயத்தையடுத்து அதற்கு சிகிற்சை பெறவேண்டியிருப்பதால் அவர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்டுக்குப்பிறகு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்மித் நாடுதிரும்புவதையடுத்து ஜக் கலிஸ் அணிக்குத்தலைமை தாங்குவார் எனவும், ஒருநாள் அணியில் ஏற்கனவே சேர்த்துக் கொள்ளப்படாத போர்மிலுள்ள துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா சிமித்துக்குப்பதிலாக அணிக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்மித்துக்கு 10 நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாகவும், இது லுட் பொஸ்மன் போன்ற தென்னாபிரிக்க இளம்வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த களமாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முதுகு நோவினால் நாடு திரும்பிய மார்க் பவுச்சர் குணமடைந்திருப்பதாகவும் மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்காக வெள்ளிக்கிழமை இந்தியா வரவிருப்பதாகவும், அவர் ஞாயிற்றுக்கிழமை போட்டியில் விளையாடுவார் எனவும் ஓவன் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்தார்.

ஷேண் வோண் விளையாட மாட்டாரா?

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்தமுறை IPLலில் விளையாடுவது குறித்து தான் ஒன்றுக்கு இரண்டுமுறை சிந்திக்கவுள்ளதாக ஷேண் வோண் அறிவித்துள்ளார். இதுதவிர ஹொங்கொங்கின் ஏசியா டைம்ஸ்சில் வெளியான "இந்திய விளையாட்டுப்போட்டி தாக்கப்படும் என்ற தீவிரவாத இயக்கமொன்றின் செய்தி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தச்செய்தி உண்மை என அறியப்பட்டால் IPL போட்டி ஏற்பாட்டாளர்கள் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்புக்கருதி உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் எனக்கூறப்படுகிறது.

ஷேண் வோண் இன் பாதுகாப்பு நிபுணர் திரு. டிக்கர்சனின் ஆலோசனைப்படியே போட்டியில் கலந்து கொள்வது தொடர்பாக முடிவெடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.இந்தியாவில் உலகக்கிண்ண ஹொக்கி போட்டி, அடுத்து IPL போட்டிகள், அதைத்தொடர்ந்து கொமன்வெல்த் போட்டிகள் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் ஹோட்டல்களில் தங்கியிருக்கிறோம், மைதானத்துக்கு பேருந்துகளில் பயணிக்கிறோம், இவை தவிர கடந்த முறை லாகூரில் இலங்கைக்கு நடந்தது உங்களுக்கு நினைவிருக்கும், ஆகவே இது பயங்கரமான ஒரு விடயம் என்று ஷேண் வோண் மேலும் தெரிவித்தார்

இது தவிர ஏற்கனவே பாதுகாப்புப் பிரச்சினை குறித்து இங்கிலாந்து கொமல் வெல்த் அணி அச்சம் வெளியிட்டதும், நாளிதள் ஒன்றில் அவுஸ்திரேலிய பெரிய தலைகள் சொந்தப்பாதுகாப்புக்காக அதிகாரிகளை இந்தப்போட்டிக்காக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மியாண்டடிடம் பாக்.பயிற்றுனராக கோரிக்கை

பாகிஸ்தான் கிறிக்கற் சபை ஜாவிட் மியண்டாட்டை மீண்டும் பாகிஸ்தானின் கிறிக்கற் பயிற்றுவிப்பாளராக ஆகுமாறு கேட்டுள்ளது. திங்கட்கிழமை செனட் ஸ்டான்டிங் கொமிட்டியின் ஒன்றுகூடலில் தீர்மானிக்கப்பட்டது. பாகிஸ்தான் கிறிக்கற்றின் தற்கோதைய நிலை மற்றும் பாகிஸ்தான் கிறிக்கற் சபை தலைவர் இஜாஸ் பட் மற்றும் மியண்டாட் இடையிலேயே பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இஜாஸ் பட் தன்னை முக்கியமான விடயங்களில் ஈடுபடுத்துவதை விரும்பவில்லை என்று முன்னர் மியண்டாட் தெரிவித்திருந்தார்.  கிறிக்கற் கொமிட்டியிடம் தனக்கு மியாண்டட்டின் தகமைகள் மீது நம்பிக்கை இருக்கிறது, முன்பு கூட அவருக்கு அப்பதவியை வழங்கத்தயாராக இருந்தோம் என இஜாஸ் தெரிவித்தார்.

இஜாஸ் அவர்கள் மியண்டாட் மிகுந்த கிறிக்கற் அறிவு மற்றும் பயிற்றுவிக்கும் தொழிநுட்பங்களை அறிந்தவர் அவரை பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக்க நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியபோதும், மியண்டாட் தனது வேலைகள் காரணமாக தன்னால் முழுநேரப்பயிற்சியாளராக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் அவுஸ்திரேலிய வெள்ளையடிப்பு, அணிக்குள் இருக்கும் பிரச்சினைகள் எனப'பல பிரச்சினைகளில் சிக்கியிருப்பதும் அங்கு பாதுகாப்புப்பிரச்சினைகள் காரணமாக அங்கு நடைபெற வேண்டிய போட்டிகள் டுபாயில் நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பயிற்றுவிப்பாளர் பிரச்சினையும் சுர்ந்து கொண்டுள்ளது.

குறிப்பு: சிலநாட்களாக சில வேலைப்பழுக்களால் தமிழில் கிறிக்கற்றில் செய்தி வெளியிடுதல் குறைந்திருந்தது... இனி வழமையைப் போல தொடர்ந்து செயற்படுவோம்.

கொல்கத்தா ஆடுகளம் மீது டோனி அதிருப்தி...

இந்திய அணியைப் பொறுத்தவரை அவர்களின் துடுப்பாட்ட வரிசையையும் அவர்களின் எதிரணியையும் விட கொல்கத்தை ஈடன் காடன்ஸ் ஆடுகளம் தான் இந்திய அணிக்கு பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது போலிருக்கிறது.



கொல்கத்தாவின் மைதான/ஆடுகளப் பராமரிப்பாளர் பிரபீர் முகர்ஜி நல்ல ஆடுகளத்தை தயாரிப்பதை விரும்புவதாகவும், சுழலுக்கு சாதகமான மைதானத்தை வடிவமைக்குமாறு இந்திய அணியிலிருந்து வந்த கோரிக்கையை அவர் ஏற்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆடுகளத்தில் காணப்படும் புற்களை முழுமையாக வெட்டும் திட்டத்திற்கு பிரபீர் முகர்ஜி ஒத்துழைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்திய அணியின் தலைவர் சிறிது கோபமடைந்திருக்கிறார் அல்லது அதிருப்தியடைந்திருக்கிறார்.
'பொதுவாக sporting wickets ஐத் தயாரிக்க வேண்டும் என்ற கருத்து சொல்லப்படுகிறது, என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ரீதியில்ஆடுகளங்களில் புற்கள் இருக்க வேண்டும் என்று எங்கும் எழுதிவைக்கப்படவில்லை' இவ்வாறு தனது அதிருப்தியை வெளியிட்ட அவர், 'போட்டியை நடாத்தும் அணி தங்களுக்கு சாதகமான ரீதியில் ஆடுகளத்தை தயாரிப்பது வழமையானது,எதிரணிக்கு சார்பாக அல்ல' என்றும் தெரிவித்தார்.



'போட்டித்தனமை வாய்ந்த ஆடுகளங்கள் என்றால் ஆடுகளத்தில் புற்களும், வேகப்ந்து வீச்சாளர்களுக்கு அதிக பவுண்ஸ்களும் இருக்க வேண்டும் என்று தவறாகக் கொள்ளப்படுகிறது. போட்டித்தன்மை வாய்ந்த ஆடுகளமென்றால் துடுப்புக்கும், பந்துக்கும் இடையில் சமநிலை நிலவினால் போதுமானது.. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சிறப்புத்தன்மைகள் உண்டு. தென்னாபிரிக்கா சென்றால் அங்கு பவுண்ஸ் ம், seam movemeant உம் இருக்கும், இங்கிலாந்து நியூசிலாந்தில் ஸ்விங் அதிகமாக இருக்கும். அதேபோல் எங்களுக்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து திரும்புதலும் பவுண்ஸ் செய்தலும் அதிகமாக உண்டு.' என்றார்.




மைதானத்தை சக வீரர்கள் சிலருடனும், பயிற்றுவிப்பாளருடனும் சென்று பார்வையிட்ட டோணி ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் போலிருக்கிறது என்று கருத்துத் தெரிவித்தார்...

கிரேம் ஸ்மித்திற்கு விரலில் காயம்...

தென்னாபிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித் இற்கு விரலில் காயமேற்பட்டுள்ளது. கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் களத்தடுப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு காயமேற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மைதானத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட X-கதிர்ப் பரிசோதனையில் அவரின் காயம் பெரிதளவில் இல்லை எனவும், தசைநாண்களில் பிரச்சினை ஏதும் இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உள்ளூர் வைத்தியாசாலை ஒன்றிற்கு MRI scan இற்காக ஸ்மித் செல்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கிரேம் ஸ்மித்


களத்தடுப்புப் பயிற்சிகளில் கிரேம் ஸ்மித் இற்கு இடது கையின் சிறிய விரலில் (சின்னி விரல்) காயமேற்பட்டது. தென்னாபிரிக்க அணியின் ஊடக முகாமையாளர் மைக்கல் ஒவன் ஸ்மித் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் விரலின் வெளிப்பகுதி பாதியில் காயமேற்பட்டுள்ளதாகவும், மேற்கொள்ளப்பட்ட X-கதிர்ப் பரிசோதனையில் என்பு முறிவு ஏதும் காணப்படவில்லை என்றும் அதை உறுதிப்படுத்த MRI scan மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

'அவர் அடுத்த போட்டியில் நிச்சயமாக விளையாடுவார்' என்று தெரிவித்த தென்னாபிரிக்காவின் ஏபி.டீ.வில்லியர்ஸ் 'அவர் நிரப்பமுடிாயத வீரர்' என்றும் தெரிவித்தார்.

கடந்த 20 மாதகாலப்பகுதியில் ஸ்மித் பல்வேறு காயங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2008 ஏப்ரலில் ஐ.பி.எல் இல் ரெனிஸ் எல்போ வும், பின்னர் மிற்சல் ஜோன்சன் ஸ்மித் இன் கையில் என்பு முறிவை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்திய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரெஸ்ற் போட்டிகள் எதிர்வரும் 14ம் திகதியன்று கொல்கத்தாவில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கை நெருங்குகிறது கிறிக்கற்...

சர்வதேச ஒலிம்பிக் சபையின் தலைவர் ஜக்ஸ் றொக் சர்வதேச கிறிக்கற் சபையை அங்கீகரித்தார், இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் மிக முக்கிய காலடியை கிறிக்கற் எடுத்து வைத்திருக்கிறது. கிறிக்கற்றோடு சேர்த்து இன்னும் 2 விளையாட்டுக்களும் அனுமதி பெற்றிருக்கின்றன.

ஜக்ஸ் றொக்

'அவர்கள் (ஐ.சி.சி) எங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாக மாறியிருக்கிறார்கள், இதன்மூலம் அவர்கள் இனிவரும் காலங்களில் எங்கள் நிகழ்வுகளில் பங்குபெறலாம்.' எனத் தெரிவித்தார் என சர்வதேச ஒலிம்பிக் சபையின் தொடர்பாடல் இயக்குனர் மார்க் அடம்ஸ் தெரிவித்தார், அத்தோடு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறுவதன் முதற்படியாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

பழைய காலப் போட்டியொன்று- Bodyline தொடர்....

அங்கீகரிக்கப்பட்ட போட்டிகள் என்ற அந்தஸ்து ஒலிம்பிக் சபையால் 2007ம் ஆண்டு கிறிக்கற்றுக்கு வழங்கப்பட்டது, ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் போட்டியாக அப்போது இடம்பெறவில்லை.

எனினும் முன்னாள் அவஸ்ரேலிய விக்கற் காப்பாளர் அடம் கில்கிறிஸ்ற் போன்றவர்களின் அழைப்புக்களான 'இருபதுக்கு இருபது போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும்' என்பதற்கு நடுவிலும் சர்வதேச கிறிக்கற் சபை இருபதுக்கு இருபதை ஒலிம்பிக்கில் சேர்ப்பதில் உடனடித் திட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

1900 ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிறிக்கற் இடம்பெற்றதும் அதன்பின்னார இடம்பெறாததும் இவ்வருடம் சீனாவில் இடம்பெறவுள்ள ஆசியப் போட்டிகளில் (Asian games) கிறிக்கற் இடம்பெறப் போவதும் குறிப்பிடத்தக்கது.

சுழலுக்கு சாதகமாக மைதானத்தை தயார்படுத்தக்கோரிய BCCI


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதான பராமரிப்பாளர் பிரபிர் முகஞ்ஜி தனக்கு BCCIயிடமிருந்து பெப்பிரவரி 14ஆம் திகதி ஆரம்பிக்கும் போட்டிக்கான மைதானத்தை சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றது போல தயார் செய்யும்படி தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தெரிவித்தார். எது எவ்வாறிருந்த போதும் இந்திய கிறிக்கற் முகாமைத்துவ அதிகாரி இரட்னகார் செட்டி இந்தமாதிரியான எந்த ஒரு வேண்டுகோளுக்கும் செவிசாய்க்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.

இந்திய அணி தனது முதலாவது போட்டியை இன்னிங்சாலும் ஆறு ஓட்டங்களாலும் இழந்த பின்னர் மீண்டும் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெறுவதற்கு அடுத்த போட்டியில் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. முதலாவது போட்டியிலும் மைதானம் சுழலுக்கு சாதகமாகவே இருந்தது ஆனால் இந்திய பந்து வீச்சாளர்களின் திறமையற்ற பந்து வீச்சுத்தான் அவர்களால் விக்கட்களைச் சாய்க்கமுடியாமைக்குக்காரணமாகும்.

எனக்கு BCCI அதிகாரி ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது சுழலுக்கு ஏற்றாற்போல் மைதானத்தை தயார் செய்யும்படி, ஆனால் நான் உத்தியோகபூர்வமான தகவல்(ஈ-மெயில் போன்ற) வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வதாக அவருக்குத் தெரிவித்துவிட்டேன். என்று முகர்ஜீ தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர் "நான் வழக்கமான இந்தியா மைதானங்கள் போல மைதானத்தை தயார்படுத்தச் சொல்லியிருக்கிறேன், நான் தேவையின்றி அபாயத்தில் காலடியெடுத்து வைக்கத்தயாரில்லை. கடந்த வருடம் இலங்கை -இந்தியப் போட்டி இரத்துச் செய்யப்பட்டது போல நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக என்றார்.

முதல்நாளிலேயே உங்களுக்கு பந்து சுழலுக்கு சாதகமாக இருக்கவேண்டுமென்றால் ஏன் உங்களுக்கு டெஸ்ட்டுக்கு எதற்கு மைதானத்தை தயார்படுத்த வேண்டும், தயார்படுத்துபவர் எதற்கு? ஈடன் கார்டன் மைதானம் போதியளவு விக்கட்டுகளைச்சாய்க்கக்கூடிய மற்றும் சுழலையும் BOUNCEஐயும் பெறக்கூடிய மைதானம் அதை பந்து வீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும் என்றார்.

2008ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கான்பூரில் கடைசி டெஸ்ட்போட்டிக்கு 1-0 என்று முன்னிலையுடன் சென்ற தென்னாபிரிக்கஅணி, முதலாவது நாள் முதலே  மைதானத்தில் காணப்பட்ட சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான தன்மை காரணமாக 3 நாட்களில் தென்னாபிரிக்கா தோற்கடிக்கப்பட்டதும், அதன்பின்னர் ICC, BCCIயிடம் விளக்கம் கோரியமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி - http://www.cricinfo.com/

இன்டிக்காப் அலாம் ,யூசுப் -விசாரணை


பாகிஸ்தான் கிறிக்கற் சபைக்கு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார் அதன் கிறிக்கற் பயிற்றுவிப்பாளர் இன்டிக்காப் அலாம். பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலிய அணியால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது இருபது போட்டிகள் அனைத்திலும் வெள்ளையடிப்பு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இது ஒரு இரகசியமான அறிக்கை என்னால் இதில் கூறப்பட்ட விடயங்களை வெளிப்படுத்த முடியாது. நான் கூடுதலாக போட்டியின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியிருக்கிறேன் நான் குறிப்பிட்ட விடயங்கள் பாகிஸ்தான் கிறிக்கற் சபைக்கு அவுஸ்திரேலிய வெள்ளையடிப்புத் தோல்விக்கான காரணங்களை அறிய உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

இன்டிக்காப் அலாம் மற்றும் மொஹமட் யூசுப் ஆகியோர் அவுஸ்திரேலிய  தொடரில் பெற்ற தோல்விக்குப்பின்னர் ஆறு பேர் கொண்ட குழுவால் விசரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். முதற்கட்ட விசாரணை நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் யூசுப் அணிக்குள் ஒரு கறுப்பாடு இருக்கிறது, அணி ஒற்றுமையை அணிவீரர் ஒருவரே குலைக்கிறார் என்று குறிப்பிட்ட விடயம் அனைவரும் அறிந்தது, எனவே இந்த விசாரணைக்குப்பிறகு அந்த கறுப்பாடு யார் என்ற உண்மைகள் வெளிவந்தாலும் வரலாம்.

செய்தி - http://www.dailytimes.com.pk/

அணி ஒற்றுமையை ஒரு வீரர் தான் சீர்குலைக்கிறார் - யூசுப்


பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவர் மொஹமட் யூசுப் பாகிஸ்தான் அணியின் ஒற்றுமையை சீர்குலைக்க அணியில் உள்ள ஒரு வீரர் முனைவதாக தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்குப்பேட்டியளிக்கும்போதே அவர் இது பற்றி பல விடயங்களைத் தெரிவித்தார். ஆனால் அந்த வீரரின் பெயரைக்கூற மறுத்துவிட்டார் யூசுப்.

"அணியின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஒரு வீரர் ஈடுபட்டுள்ளார் அதில் எந்தவித ஐயமுமில்லை. நான் எங்கள் பயிற்றுனர் இன்டிக்காப் அலாம் மற்றும் கிறிக்கற் சபையுடன் இதுபற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். அவர்களும் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டனர். நான் அந்த வீரரின் பெயரை பாகிஸ்தான் கிறிக்கற் சபைதலைவரிடம் மட்டும் தெரிவித்தேன் என்றும், இன்டிக்காப் அலாம்(பயிற்றுனர்),அப்துர் ரகீப் (முகாமையாளர்) மற்றும் அப்ரிடிக்கு அந்த வீரர் யாரெனத்தெரியும் என்று தெரிவித்தார். நாம் அது பற்றி பலதடவைகள் பேசியிருக்கிறோம்' என்றும் தெரிவித்தார்.

நியூசிலாந்து தொடரின்போதே இன்டிகாப் அலாம் அவரிடம் கவனமாக இருக்கும்படி எனக்கு அறிவுறுத்தினார், ஆனால் நான் அவரின் நடத்தையை நேரில் காணும்வரை பொறுமைகாத்தேன், நான் அவரின் நடத்தையை அவுஸ்திரேலிய தொடரில் அவதானித்த பிறகு அவரை டெஸ்ட் போட்டிகளிலிருந்து நீக்கினோம். அவுஸ்திரேலியாவில் நாம் அவர் தொடர்பாக நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்று தீர்மானித்தோம்." என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை 3-0 எனவும் ஒருநாள்தொடரை 5-0 எனவும் அவுஸ்திரேலியாவில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

அணியின் தோல்வியில் கிறிக்கற் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையும் காரணம் எனத்தெரிவித்த யூசுப், நியூசிலாந்து தொடரில் அணிவீரர்கள் அனைவரும் என்னுடன் ஒன்றிணைந்து செயற்பட்டனர். ஆனால் எனக்கு பாகிஸ்தான் கிறிக்கற் சபை எப்போது அணித்தலைமை மாற்றம் பற்றி அறிவித்தது என்று தெரியாது. ஆனால் நான் அடுத்த போட்டியில் அணித்தலைவர் இல்லை என அறிந்த அணியின் ஆறு, ஏழு வீரர்கள் தாங்கள் அணித்தலைவர்போல காட்டிக்கொள்ளத்தொடங்கினர்.என்றார், மேலும் கருத்து வெளியிட்ட யூசுப் எனக்கு தலைமைத்துத் தகுதி இயற்கையிலே இல்லை ஆனால் என்னால் முடிநடத அளவு முயற்சி செய்தேன், ஆனால் என்னை றிக்கி பொன்ரிங்குடன் ஒப்பிடுவது மடமையானது அவர் மிகுந்த அனுபவமுள்ள ஒரு அணித்தலைவர் என்றார்.

அனைத்து அணிகளையும் எடுத்துப்பாருங்கள் அதிகமாக சாதிப்பவர்கள் அணித்தலைவர்களாக இருக்கிறார்கள்.அதுபோலவே பாகிஸ்தானின் இளம்வீரர் ஒருவர் சிறப்பாக செயற்படுகிறார் என்றால் அவரை அணித்தலைவராக்கலாம். அந்தவகையில் நான் அதைச் செய்திருக்கிறேன் என்றார். அதுவும் அணித்தலைமை பொறுப்பை ஏற்க யாரும் தயாரில்லாத நிலையில் நான் அதைச்செய்திருக்கிறேன் என்றார்.

செய்தி - http://www.cricinfo.com/

இரண்டாவது டெஸ்ட் இந்திய அணி மாற்றம்


இந்தியா தென்னாபிரிக்காவுடன் பெற்ற இன்னிங்ஸ் தோல்வியை அடுத்து அடுத்த போட்டிக்கு வலிமைவாய்ந்த அணியைக் களமிறக்க திட்டமிட்டுள்ளது. ஒருநாள் சர்வதேசபோட்டிகளில் சிறந்த வீரராகக்கருதப்படும் சுரேஸ் ரைனா, மற்றும் தினேஸ் கார்த்திக் ஆகியோர் அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர், அத்தோடு ஸ்ரீசாந்தும் அணிக்குத் திரும்புகிறார்.

விக்கெட் காப்பு துடுப்பாட்டவீரரான தினேஸ்கார்த்திக் முதல்தரபோட்டிகளில் பெற்ற இரண்டு சதங்களை அடுத்து 15 பேர் கொண்ட இந்திய அணிக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

வி.வி.எஸ்.லக்ஸ்மன் இரண்டாவது டெஸ்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் ராவிட், யுவராஜ்சிங் ஆகியோர் காயம் காரணமாக ஏற்கனவே இந்தத்தொடரில் விளையாடாத நிலையில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ள இந்திய அணி இரண்டாவதும் கடைசியுமான போட்டியை வெல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது.

சாகா, மித வேகப்பந்துவீச்சாளர் அபிமன்யு மிதுன் மற்றும் சுதீப் தியாகி ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டு சிறீசாந் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்குத்திரும்புகிறார்.

இந்திய அணி விபரம் வருமாறு - மஹேந்திரசிங் டோனி (அணித்தலைவர்), வீரேந்தர் சேவாக், கெளதம் கம்பீர், முரளி விஜய், சச்சின் டெண்டுல்கர், vvsலக்ஸ்மன், சுப்ரமணியம் பத்ரிநாத், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, சகீர்கான், சாந்தகுமார் சிறீசாந், இசாந் சர்மா, பிரகயன் ஓஜா, தினேஸ் கார்த்திக், சுரேஸ்ரைனா.


செய்தி - http://in.reuters.com/

என்னைப் பற்றி பொலிங்கர் அறிந்துள்ளார்-கெய்ல்

மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் கிறிஸ் கெய்ல் தான் டக் பொலிங்கரின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாறுவதை ஒத்துக் கொள்கிறார்..



மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான ஒருநாள் தொடரில் நடந்து முடிந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் கிறிஸ் கெய்லை டக் பொலிங்கரே ஆட்டமிழக்கச் செய்தார், அதுவும் வேளைக்கே ஆட்டமிழக்கச் செய்தார்.

நியூ சவுத் வேல்ஸ் இன் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டக் பொலிங்கர் இன்றைய இரண்டாவது போட்டியில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கற்றுக்களை வீழ்த்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டதோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

'என்னைப் பற்றிய அளவுகோலை நிச்சயமாக அவர் பெற்றுவிட்டார். (கெயிலின் துடுப்பாட்ட முறை, அதில் உள்ள குறைபாடுகளை). அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.'

'சிட்னிப் போட்டியில் (3 ஆவது போட்டியில்) இந்தப் போட்டியைத் தொடர எதிர்பார்க்கிறேன். இப்படியான விடயங்கள் விளையாட்டிற்கு நல்லது. இம்முறை நம்பிக்கையுடன் நல்ல ஆரம்ப விக்கற் இணைப்பாட்டத்தைப் பெற்று எங்கள் மத்தியவரிசையை வேளைக்கே விளையாடாமல் செய்ய முயற்சிப்போம்' என்றார் கெய்ல்.

'எல்லாப் பந்துவீச்சாளர்களும் தொடர்ந்து நன்றாகப் பந்துவீசுவதைப் பார்க்கும் போது நீங்கள் அவர்களைப் பாராட்ட வேண்டும். அவர்கள் மாற்றங்களைச் செய்கிறார்கள், ஆனால் புதிதாக வருபவர்களும் சிறப்பாக விளையாடுகிறார்கள்.'

அத்தோடு போட்டியைக் காண வரும் இரசிகர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கு தங்கள் அணியின் பலவீனம்/ஒழுங்காகக் போட்டியிடாத தன்மையும் காரணம் என்பதையும் கிறிஸ் கெயில் ஒத்துக் கொண்டார்.

இன்றைய போட்டியைக் காண வெறும் 8,378 பார்வையாளர்களே வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் ஆரம்பிக்க முன்னர் தாங்கள் இந்தத் தொடரை 4-1 என்ற விகிதத்தில் வெல்வோம் என கிறிஸ் கெய்ல் எதிர்வுகூறியிருச்தமையும் முதற்போட்டியில் தோல்வியடைந்த பின்னர் கிறிக்கற் சார்பானவர்கள் 'கிறிஸ் கெய்ல் 4-1 என்பதில் குறிப்பிட்ட ஒரு தோல்வி இதுதான்' என் நக்கல் பாணியில் கதைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி


பெப்ரவரி 6ஆம் திகதி ஆரம்பித்த இந்தியா எதிர் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான முதலிடப்போட்டியின் முதல் போட்டி 4ஆம் நாளான இன்று முடிவுக்கு வந்துள்ளது. நாணயச்சுழற்றியில் வென்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 558 ஓட்டங்களைப்பெற்று போட்டியை இடைநிறுத்திக்கொண்டது. இதில் கிரஹம் சிமித், பிரின்ஸ் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தபோதிலும் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜக் கலிஸ் மற்றும் ஹசிம் அம்லா ஆகியோர் 340 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டமை தென்னாபிரிக்க அணிக்கு வலிமை சேர்த்தது. இங்கு ஹசிம் அம்லா 253 ஓட்டங்களையும் ஜக் கலிஸ் 173 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் சகீர்கான் 3 விக்கெட்களையும், ஹர்பஜன் 2 விக்கெட்களையும், சேவாக் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 56 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியபோதும் நான்காவது விக்கெட்டுக்குஜோடி சேர்ந்த சேவாக் பத்ரிநாத் ஜோடி 136 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப்பகிர்ந்த வேளையில் சேவாக் 109 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டோனி, சாகா, ஹர்பஜன், சகீர்கான், மிஸ்ரா, இசாந் சர்மா ஆகியோரும் அதிகநேரம் ஆடுகளத்தில் நின்று பிடிக்கவில்லை. இதில் கம்பீர்(12), சேவாக் (109), பத்ரிநாத் (56) ஆகியோரைத்தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களையே பெற்றனர் என்பதும் அதில் மூன்று பேர் டக் அவுட் என்பதும் குறிப்பிடத்தக்கது. டெரல் ஸ்ரெயின் தனது முதலாவது இன்னிங்சில் 7 விக்கெட்களையும், மோர்க்கல் ஹரிஸ்,  பார்னல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போலோஒன் (follow -on) முறையில் இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் துடுப்பெடுத்தாடப்பணிக்கப்பட்ட இந்தியஅணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவிலேயே சேவாக், கம்பீர் ஆகிய ஆரம்பத்துடுப்பாட்டவீரர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது. விஜய், சச்சின் ஆகியோர் சற்று நிதானமாகத் துடுப்பெடுத்தாடினாலும் 32 ஓட்டங்களைப்பெற்றவேளையில் விஜய் ஆட்டமிழந்தார், ஆனால் சிறப்பாகத்துடுப்பெடுத்தாடிய சச்சின் டெண்டுல்கர் 100 ஓட்டங்களைப்பெற்றார். ஆனால் சச்சின் ஆட்டமிழந்ததும் இந்தியாவால் தென்னாபிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பத்ரிநாத்(06), டோனி(25), சாகா(36), ஹர்பஜன்(39), சகீர்கான்(33), மிஸ்ரா(0), இசாந் சர்மா(0) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இன்னிங்சாலும் 6 ஓட்டங்களாலும் தென்னாபிரிக்கா வெற்றியை ஈட்டிக்கொண்டது.

இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாகப் பந்துவீசிய ஸ்ரெயின் 3விக்கெட்களையும், ஹரிஸ் 3விக்கெட்களையும், பார்னல் 2 விக்கெட்களையும், மோர்கல்,கலிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றிக்குப்பங்காற்றினர். சிறப்பாட்டக்காரர் விருது 10 விக்கெட்களை வீழ்த்திய ஸ்ரெயினுக்குக் கிடைக்கும் என பலர் எதிர்பார்த்த போதும், இரட்டைச்சதம் பெற்று சிறந்த துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய ஹசிம் அம்லாவுக்கு சிறப்பாட்டக்காரர் விருது கிடைத்தது.

இதேவேளை கடந்த 25 வருட காலகட்டத்தில் இந்திய கிறிக்கற் அணி தங்கள் சொந்த மண்ணில் 3 முறை இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியிருக்கிறது... அவை மூன்றும் கடந்த 10 வருடங்களுக்குள் நடந்திருக்கின்றன, அந்த 3 தோல்விகளும் தென்னாபிரிக்க அணிக்கெதிராகவே பெறப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது...

பீட்டர்சிடில் 5 மாதங்கள் ஓய்வு


அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பீட்டர்சிடில் சர்வதேச கிறிக்கற்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு BACK INJURY காரணமாக விளையாடமாட்டார் எனத்தெரிவிக்கப்படுகிறது.

இது பற்றி கருத்து வெளியிட்ட பீட்டர் சிடில் "தொடர்ச்சியான பயிற்சிகளையும், போட்டிகளையும் உபாதைக்குக்குக் காரணம் எனக்கூறமுடியாது எனவும் ஆனால் தனக்கு உபாதை காரணமாக பந்துவீசும்போது கடுமையான வலியை உணர்வதால் தான் ஒரு மாதம் முழுமையாக ஓய்வெடுக்கப்போவதாகவும், 3 மாதங்கள் காயத்திலிருந்து குணமடையும் வண்ணம் சிகிச்சைகளையும், ஓய்வையும் எடுக்கப் போவதாகவும் அதன் பின்னர் பந்து வீச்சை தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் கிறிக்கற்றில் உபாதைகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் ஆனால் அவற்றையும் கடந்து நாம் விளையாடவேண்டும் என்றார்.

பீட்டர் சிடில் வரவிருக்கும் நியூசிலாந்துக்கெதிரான தொடரையும் மேற்கிந்தியதீவுகளில் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண இருபது இருபது போட்டியையும் தவற விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது

செய்தி - http://www.radionz.co.nz/

இங்கிலாந்துக்கெதிரான T20க்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு


இங்கிலாந்துக்கெதிராக பெப்பிரவரி 19ஆம் 20ஆம் திகதிகளில் டுபாயில்  நடைபெறவிருக்கும் இருபது இருபது கிறிக்கற் போட்டிக்கான 14 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் கிறிக்கற் நபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. சொகைப் மலிக் அணித்தலைவராக அறிவிக்கப்பட்டதோடு, பந்துக்கடித்த சர்சையில் சிக்கிய அப்ரிடி இரண்டு இருபது இருபது போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டதால் முதலாவது போட்டியில் மட்டும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கம்ரான் அக்மல் அண்மையில் விளையாடிய போட்டிகளில் சோபிக்கத்தவறியதால் அணியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய விக்கட்காப்பாளராக சப்ராஸ் அகமட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்அசிவ் 2008ஆம் ஆண்டு தனது பையில் போதைப்பொருள் வைத்திருந்ததையடுத்து ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் அவரை தங்கள் நாட்டுக்குள் நுழைய தடைவிதித்துள்ளதால் அவரும் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

பாகிஸ்தான் கிறிக்கற் சபையின் பிராதான நிறைவேற்று அதிகாரி வசீம் பாரி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் "அப்ரிடி இரண்டு போட்டிகள் தடை பெற்றிருக்காவிட்டால் இருபது இருபது போட்டிகளுக்கு அவரே தலைமை தாங்கியிருப்பார் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி விபரம் - சொகைப் மலிக் (அணித்தலைவர்), இம்ரான் நசீர், இம்ரான் பர்கத், கலிட் லத்திப், உமர் அக்மல், பாவாட் அலாம், சகிட் அப்ரிடி, அப்துல் ரசாக், சப்ராஸ் அகமட், உமர் குல், சயீட் அஜ்மல், யசீர் அரபாத், வகாப் ரியா,மொஹமட் தல்கா

செய்தி - http://www.topnews.in/

பிரட்லீ இனி பந்துவீசமாட்டார்?


அவுஸ்திரேலிய அணியின் பிரதான பந்து வீச்சாளர் பிரட்லீயின் கிரிக்கெட் வாழ்க்கை ஒரு காயத்தால் முற்றாகப்போகிறது. இது பற்றி பிரட்லீ "எனது கிறிக்கற் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது, கிறிக்கற்றில் எப்போது என்னவும் நடக்கலாம் நான் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம் அல்லது விளையாடாமலே போகலாம். என்று ஊடகங்களுக்குத்தெரிவித்தார்.

1999ஆம் ஆண்டு தனது டெஸ்ட் கிறிக்கற் வாழ்க்கையையும், 2000ஆம் ஆண்டு தனது ஒருநாள் கிறிக்கற் அறிமுகத்தையும் பெற்ற பிரட்லீ, 310 டெஸ்ட் விக்கெட்களையும், 324 ஒருநாள் சர்வதேச விக்கெட்களையும் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெய்லி டெலிகிராபுக்கு அவர் கூறியதாவது "நான் கூடுதலாக இனி எனது வாழ்க்கையில் பந்துவீச முடியாமல் போகலாம் ஆனால் நான் எனது கிறிக்கற் வாழ்க்கையை மனப்பூர்வமாக முடித்துக்கொள்ள தயார்" என்றார்.

செய்தி - http://www.indianexpress.com/

அமைதியாக நாடு திரும்பிய பாகிஸ்தான்



பாகிஸ்தான் அணி நேற்று மாலை அவுஸ்திரேலியாவில் பெற்ற வெள்ளையடிப்புக்குப்பின்னர் எந்தவித அறிவித்தலுமின்றி நாடு திரும்பியது.ஹஜ் ரேர்மினல்லுக்குப் பதிலாக ஜின்னா ரேர்மினலைப்பயன்படுத்தி வெளியேறிய பாகிஸ்தான் வீரர்களை பாதுகாப்பு வீரர்கள் ஊடகங்களிடமிருந்து தவிர்க்க முற்பட்டாலும் இன்டிக்ஹாப்  அலாம் (பாகிஸ்தான் கிறிக்கெட்பயிற்றுவிப்பாளர்) ஊடகங்களிடம் மாட்டிக்கொண்டார். ஊடகங்களின் பல்வேறு ஏடாகூடமான கேள்விகளுக்குப்பதிலளித்த அவர். "வீரர்களின் தவரான துடுப்புப்பிரயோகமும், சீரற்ற களத்தடுப்புமே தோல்விக்குக் காரணம் என்றார்.மேலும் கருத்துத்தெரிவித்த அவர் பாகிஸ்தான் அணி இதற்கு முன்னும் அவுஸ்திரேலிய மண்ணில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்பதையும் வீரர்கள் மனதில் கொள்ளவேண்டும் என்றார்


அதுதவிர மொஹமட் யூசுப், யூனிஸ்கான், அப்ரிடி ஆகியோர் இந்த வார ஆரம்பத்தில் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தான் அணி 3டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு T20 போட்டி என அனைத்துப்போட்டிகளிலும் தோல்வியடைந்தமை, மற்றும் அப்ரிடி பந்தைக்கடித்த விடயம் என பல விடயங்கள் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது. இது அவர்களுக்கு ஒரு மறக்கமுடியாத தொடராக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.


செய்தி- http://www.dawn.com/