உலகக் கிண்ணத்தை நடாத்த மாற்று நாடுகளும் தயார் நிலையில்...

2011 உலகக் கிண்ணத்தை இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து பாதுகாப்புக் காரணங்களிற்காக மாற்றும் நிலையில் போட்டிகளை அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடாத்த திட்டங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நியூசிலாந்து கிறிக்கற் சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஜஸ்ரின் வோண் மேற்படி ஒரு திட்டமிருப்பதை ஏற்றுக் கொண்டபோதிலும், உலகக் கிண்ணம் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டதன்படி உபகண்டத்தில் நடைபெற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்ததோடு ஏற்கனவே திட்டமிட்டபடி நியூசிலாந்து இவ்வருட இறுதியில் இந்தியாவிற்கு பயணம் செய்யும் என்றும் தெரிவித்தார்.



'உலகக் கிண்ணம் நடைபெறும் காலத்தை மார்ச்-ஏப்ரல் என்பதிலிருந்து மாற்ற முடியாது. ஆகவே அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகியனவற்றாலயே போட்டிகள் இடம்மாற்றப்பட்டால் போட்டிகளை நடாத்த இயலும்' என்று நியூசிலாந்து இணையத்தளமொன்றிற்கு தெரிவித்தார் வோண்.

'வீரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பது வெளிப்படையான ஒரு தேவை. ஆனால் அதற்காக அச்சுறுத்தல் ஒன்று வரும்போது நாங்கள் விட்டுவிலகி ஓடக்கூடாது, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து அணிகளைச் சுற்றி அதிகரித்து அச்சுறுத்தலை இல்லாமல் செய்ய வேண்டும்.
இதற்கு நாங்கள் ஓர் தீர்வைக் காண வேண்டும். ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் கிறிக்கற்றின் இதயத்துடிப்பாக ஆசியாவே திகழ்கிறது' என்றும் தெரிவித்தார்.

அத்தோடு இந்தியாவில் பாதுகாப்பு விடயங்களை ஆராய்தல் முக்கியமானது என்றும் தெரிவித்த வோண், 'இந்தியா மிக முக்கியமானது. இந்தியாவிற்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் காரணமாக பயணம் செய்ய முடியாது என்ற ஓர் காட்சியை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. அது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. நடத்துபவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியமானவை. பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இருந்தால் உலகில் எந்த நாட்டிற்கும் செல்ல நான் தயார், அது ஈராக் ஆக இருந்தாலும்.' என்றும் தெரிவித்தார்.

எனினும் சர்வதேச கிறிக்கற் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகாட் பிரதான கிறிக்கற் விளையாடும் நாடுகள் ஒற்றுமையாகச் செயற்பட்டு உலகக் கிண்ணம் தீவிரவாதத்திற்கு அடிபணியாது தடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.



பாகிஸ்தானிலுள்ள அல்-குவைதாவின் ஒரு பிரிவு ஐ.பி.எல் போட்டிகளுக்கு வீரர்களை அனுப்பக்கூடாது என சர்வதேச கிறிக்கற் விளையாடும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த பின் பாதுகாப்புப் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments: