தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி


பெப்ரவரி 6ஆம் திகதி ஆரம்பித்த இந்தியா எதிர் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான முதலிடப்போட்டியின் முதல் போட்டி 4ஆம் நாளான இன்று முடிவுக்கு வந்துள்ளது. நாணயச்சுழற்றியில் வென்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 558 ஓட்டங்களைப்பெற்று போட்டியை இடைநிறுத்திக்கொண்டது. இதில் கிரஹம் சிமித், பிரின்ஸ் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தபோதிலும் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜக் கலிஸ் மற்றும் ஹசிம் அம்லா ஆகியோர் 340 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டமை தென்னாபிரிக்க அணிக்கு வலிமை சேர்த்தது. இங்கு ஹசிம் அம்லா 253 ஓட்டங்களையும் ஜக் கலிஸ் 173 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் சகீர்கான் 3 விக்கெட்களையும், ஹர்பஜன் 2 விக்கெட்களையும், சேவாக் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 56 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியபோதும் நான்காவது விக்கெட்டுக்குஜோடி சேர்ந்த சேவாக் பத்ரிநாத் ஜோடி 136 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப்பகிர்ந்த வேளையில் சேவாக் 109 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டோனி, சாகா, ஹர்பஜன், சகீர்கான், மிஸ்ரா, இசாந் சர்மா ஆகியோரும் அதிகநேரம் ஆடுகளத்தில் நின்று பிடிக்கவில்லை. இதில் கம்பீர்(12), சேவாக் (109), பத்ரிநாத் (56) ஆகியோரைத்தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களையே பெற்றனர் என்பதும் அதில் மூன்று பேர் டக் அவுட் என்பதும் குறிப்பிடத்தக்கது. டெரல் ஸ்ரெயின் தனது முதலாவது இன்னிங்சில் 7 விக்கெட்களையும், மோர்க்கல் ஹரிஸ்,  பார்னல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போலோஒன் (follow -on) முறையில் இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் துடுப்பெடுத்தாடப்பணிக்கப்பட்ட இந்தியஅணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவிலேயே சேவாக், கம்பீர் ஆகிய ஆரம்பத்துடுப்பாட்டவீரர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது. விஜய், சச்சின் ஆகியோர் சற்று நிதானமாகத் துடுப்பெடுத்தாடினாலும் 32 ஓட்டங்களைப்பெற்றவேளையில் விஜய் ஆட்டமிழந்தார், ஆனால் சிறப்பாகத்துடுப்பெடுத்தாடிய சச்சின் டெண்டுல்கர் 100 ஓட்டங்களைப்பெற்றார். ஆனால் சச்சின் ஆட்டமிழந்ததும் இந்தியாவால் தென்னாபிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பத்ரிநாத்(06), டோனி(25), சாகா(36), ஹர்பஜன்(39), சகீர்கான்(33), மிஸ்ரா(0), இசாந் சர்மா(0) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இன்னிங்சாலும் 6 ஓட்டங்களாலும் தென்னாபிரிக்கா வெற்றியை ஈட்டிக்கொண்டது.

இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாகப் பந்துவீசிய ஸ்ரெயின் 3விக்கெட்களையும், ஹரிஸ் 3விக்கெட்களையும், பார்னல் 2 விக்கெட்களையும், மோர்கல்,கலிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றிக்குப்பங்காற்றினர். சிறப்பாட்டக்காரர் விருது 10 விக்கெட்களை வீழ்த்திய ஸ்ரெயினுக்குக் கிடைக்கும் என பலர் எதிர்பார்த்த போதும், இரட்டைச்சதம் பெற்று சிறந்த துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய ஹசிம் அம்லாவுக்கு சிறப்பாட்டக்காரர் விருது கிடைத்தது.

இதேவேளை கடந்த 25 வருட காலகட்டத்தில் இந்திய கிறிக்கற் அணி தங்கள் சொந்த மண்ணில் 3 முறை இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியிருக்கிறது... அவை மூன்றும் கடந்த 10 வருடங்களுக்குள் நடந்திருக்கின்றன, அந்த 3 தோல்விகளும் தென்னாபிரிக்க அணிக்கெதிராகவே பெறப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது...

0 comments: